srilanka marriage registration
By docsagency May 24, 2020 0 Comments
இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள் எவை?( Marriage Registration in Sri Lanka) (2 நிமிட பதிவு)

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்கள் தொடர்பான தொடரில் தற்பொழுது திருமணத்திற்க்கான தகைமைகள்(Marriage Registration in Sri Lanka and Requirements) தொடர்பில் ஆராயப்படுகின்றது.மக்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை இலகுவான முறையில் புரிய வைப்பதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும்.

சமூகமொன்றில் சட்டரீதியான உரிமைகளை அனுபவிப்பதற்கு ஆட்களை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையாக திருமணம் இருக்கின்றது. திருமணத்தில் பாலியல் திருப்தி அடைதலை தாண்டி அதன் விளைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்தை வழங்குதலில் இது முக்கியமானது

திருமணம் செய்யும் போது தகைமைகளை பூர்த்திசெய்யாமல் நிறைவேறிய திருமணங்கள் வெற்றானதாக கருதப்படும். இதன்மூலம் குழந்தைகள் சட்டரீதியான அந்தஸ்தை இழக்கின்றனர்.

எனவே இந்த பதிவில் திருமணம் நடைபெறுவதற்கு தரப்பினர் கொண்டிருக்கவேண்டிய தகைமைகளை இங்கு ஆராய்கின்றோம்.

1. இலங்கையில் திருமணம் தொடர்பான சட்டம்

இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக திருமண சட்டங்கள் இருக்கின்றன. அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் வட மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு தேசவழமை சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும்(General Marriage Ordinance) உண்டு.

இந்தப்பதிவில் பொது திருமணசட்டத்தில் தேவைப்படுத்தப்படும் தகைமைகள்/தகுதிகள் என்னவென்று பார்ப்போம்.

2. பொது திருமண சட்டத்தில் தேவைப்படுத்தப்படும் தகைமைகள்

இலங்கையில் பொது திருமணசட்டப்படி தரப்பினர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் பின்வருவன தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

  1. திருமண வயது
  2. தடுக்கப்பட்ட திருமணங்கள்
  3. முதல் திருமணம் செய்திருத்தல்
  4. திருமண சம்மதம்
  5. சட்டத்தில் கூறப்பட்ட முறைகளை பின்பற்றாமல் திருமணம் பதிதல்
3. திருமணம் செய்யக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை எது?

ஆரம்பத்தில் இலங்கையின் பொதுத்திருமணசட்டதின் கீழ் ஆண்களுக்கு 14 வயதாகவும் பெண்களுக்கு 12 வயதாகவும் இருந்தது. 1995ம் ஆண்டில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

Read:  திருமண பதிவு செய்யப்படாமல் இடம்பெறும் வழக்காற்று திருமணம் செல்லுபடியாகுமா?

அதன்படி தற்போது ஆண்,பெண் இருவருக்குமான ஆகக்குறைந்த திருமண வயது 18 ஆகும். இருவரில் ஒருவர் 18 வயதிலும் குறைவாக இருந்து திருமணம் பதிந்தால் அது செல்லுபடியற்றதாகும்.

4. நீங்கள் யாரை திருமணம் செய்ய முடியாது?

பொதுவாக இரத்த உறவு தொடர்புபட்ட நபர்களுக்கிடையிலான திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பொது திருமணசட்டத்தின் கீழ் யாரெல்லாம் திருமணம் செய்யமுடியாது என பட்டியலிடுகின்றோம்.

1.ஒருவர் மற்றவரின் வாரிசாக இருத்தல் – உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்த திருமணம் பதியாமல் இருந்து பின்னர் அந்த பெண்ணின் மூலம் தனக்கு பிறந்த பிள்ளையை தானே திருமணப்பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது

2.ஒரு நபருக்கும் அவரின் மனைவி/கணவனை முன்னைய தாரத்தின் மகள்/மகனுடனான திருமணம்

உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்த திருமணம் பதியாமல் இருந்து பின்னர் அந்த பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த பிள்ளையை திருமணப்பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது

3.இரத்த வழி உறவுள்ள சகோதர சகோதரிகள் தமக்குள் திருணம் செய்ய முடியாது

4.ஒரு நபருக்கும் அவரின் மகன்/மகள் , பேரன்/பேத்தி, தாய்/தந்தை, தாத்தா/பாட்டி ஆகியோரின் விதவை/தாரமிழந்தவருக்கும்(தபுதாரன்)இடையிலான திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்த திருமணம் பதியாமல் இருந்து பின்னர் தனது மகன் இறந்தபின், மகனின் மனைவியை (மருமகள்) திருமண பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது

மச்சான்-மச்சாள் போன்றோருக்கிடையிலான திருமணங்கள் தடுக்கப்படவில்லை. எனினும் மருத்துவ காரணங்களின் கீழ் இவை பெரிதும் விரும்பப்படுவதில்லை.

5. முதல் திருமணம் நிலைத்திருத்தல்

பொதுச்சட்டம், தேசவழமை சட்டம் ,கண்டிய சட்டத்தின் கீழ் திருமணமான ஆள் ஒருவர் இரண்டாவது திருமணம் வாழ்க்கைத்துணை உயிரோடு இருக்கும் வரை/விவாகரத்து செய்யும் வரை/ முதல் திருமணம் செல்லுபடியற்றது என அறிவிக்கப்படும் பதிய முடியாது.

இலங்கையில் உள்ள வழக்காற்று திருமண சட்டங்களை பற்றி எதிர்வரும் பதிவுகளில் தனித்தனியே விளக்குகின்றோம்.மேலும் விவாகரத்து மற்றும் திருமணத்தை செல்லுபடியற்றதாக்கலுக்கும் வேறுபாடு உண்டு என நீங்கள் உணர வேண்டும். இதனை விரிவாக வேறு பதிவில் பார்க்கலாம்.

Read:  இலங்கையில் புதிதாக பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.

இஸ்லாமிய ஆண் பலதார திருமணம் செய்யலாமா?

முஸ்லிம் சட்டம் இஸ்லாமிய ஆண் ஒருவருக்கு பலதார மனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

எனவே நான்கு மனைவிமாருடைய மனம்சார் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய தகுதியுடைய இஸ்லாம் ஆண் ஒருவர் நான்கு செல்லுபடியான திருமணம் செய்யலாம்.

அபயசுந்தர வழக்கு தீர்ப்பு

ஒருவர் பொது திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்தால் விவாகரத்து செய்த பின்னரே புதிய திருமணம் செய்ய முடியும். விவாகரத்து நடைமுறை அதிக காலம் எடுப்பதால் இஸ்லாம் மதத்திற்கு மாறி இரண்டாம் திருமணம் செய்தது சரியா? என கேள்வி எழுந்தது.

தீர்ப்பில் இஸ்லாமிய மதத்தை தழுவுவதன் மூலம் முதல் திருமணத்தில் அடையாளப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை/நிபந்தனைகளை மீறமுடியாது என கூறப்பட்டது.

6. திருமணம் செய்பவர்களின் சம்மதம்

ஐக்கிய நாடுகள் சபையின் திருமண பதிவு தொடர்பாக 1962இல் வெளியிட்ட அறிக்கையில் “இரண்டு தரப்பினரின் முழுமையான சுதந்திரமான சம்மதமின்றி எந்த திருமணமும் சட்ட ரீதியாக ஏற்படுத்தமுடியாது” என கூறப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையின் பொது திருமண சட்டத்தின் படி திருமண பதிவில் தரப்பினர் கையொப்பமிடுவதன் மூலம் சம்மதத்தை வெளிப்படுத்தவேண்டும்.

7. பொதுத் திருமண சட்டத்தில் கூறப்பட்ட படிமுறைகளை பின்பற்றாமல் செய்த திருமணம் செல்லுபடியற்றது

ஒரு திருமணம் எவ்வாறு பதியப்பட வேண்டும் என்ற படிமுறைகள் பொது திருமண சட்டத்தில் கூறப்படுள்ளது.

முதலில் தரப்பினர் இருவரும் ஒரு பிரதேச செயலக எல்லைக்குள் வசிப்பார்கள் எனின் அதில் ஒருவர் பதிவாளர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் அறிவித்தலில்(Notice) கையொப்பமிட வேண்டும். அதனுடன் இருவரின் பிறப்பு சான்றிதழ்கள்,அடையாள அட்டை பிரதியும் வழங்க வேண்டும் .

Read:  இலகுவாக பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

இங்கு “வசித்திருத்தல்” என்பது குறைந்தது அறிவித்தல் வழங்குவதற்க்கு 10 நாட்களுக்கு முன்னராவது வசித்திருக்க வேண்டும்.

பின்னர் பதிவாளர் தனது அலுவலகத்தில் அந்த அறிவித்தலை 12 நாட்களுக்கு காட்சிப்படுத்துவார். திருமண பதிவு தொடர்பாக எவ்வித ஆட்சேபனையும் பெறப்படாத போது 12 நாட்களின் பின் திருமண பதிவு செய்யலாம். இந்த அறிவித்தல் 3 மாதம் வரை செல்லுபடியாகும்.

திருமண பதிவில் இரு தரப்பினர்,இரண்டு சாட்சி, பதிவாளர் ஆகிய ஐவரும் ஒரே இடத்தில் சமுகமளித்து, பதிவாளர் இருவரும் சம்மதத்துடன் திருமணம் செய்கின்றனரா என வினாவி இறுதியில் ஐவரும் கையொப்பமிட்டு திருமண பதிவு நிறைவேற்றப்படும்.

திருமண பதிவு 3 தாள்களில் பதியப்பட்டு, ஒருபிரதி தரப்பினரிடம் வழங்கப்படும்.

இதனை தவிர தேவாலயத்தில் திருமண பதிவு செய்தல் தொடர்பாக ஏற்பாடுகளும் பொது திருமண சட்டத்தில் காணப்படுகின்றன.

இருவரும் வெவ்வேறு பிரதேச செயலக எல்லைக்குள் வசிப்பார்கள் எனின் அதில் திருமண பதிவுக்கு செய்ய இருக்கும் பிரதேசசெயலகத்துக்குரிய பதிவாளரால் காட்சிப்படுத்தப்பட்ட அறிவித்தலின் உண்மை பிரதி, மற்றைய தரப்பினரின் பிரதேச செயலகத்துக்குரிய பதிவாளரால் காட்சிப்படுத்தப்பட்டு எவ்வித ஆட்சேபனையும் கிடைக்கப்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் Pink Form வழங்கப்படும். அதனை தற்போது பதிவுசெய்யும் பதிவாளரிடம் வழங்கவேண்டும்.

சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்

மேலும் உங்களுக்கு இந்த பதிவு தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் கேள்விகள் கேட்கமுடியும்.

எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    PREV POST பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வது எப்படி?
    NEXT POST திருமண பதிவு செய்யப்படாமல் இடம்பெறும் வழக்காற்று திருமணம் செல்லுபடியாகுமா?