பிறப்பு சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வது பற்றி பலருக்கு குழப்பங்கள் உள்ளது. பிறப்புப்பதிவு தொடர்பான விபரங்கள் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சியாக இப்பதிவு (Birth Certificate Correction/ Birth Certificate Alteration) அமைகின்றது.ஏற்கனவே பதியப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஒன்றின் மூலப்பிரதியை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றி முதல் பதிவில் ஆராய்ந்துள்ளோம்.
அரச அலுவலகங்களில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான விடயங்களை கையாளுதல் சிக்கலான விடயமாக இருப்பதாகவே எல்லோரும் நினைக்கின்றார்கள்.ஆனால் இது தொடர்பான அடிப்படைகள் புரியும்போது இலகுவான விடயமாக இருக்கும் .
இலங்கையில் பதியப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் அப்பிரிவுக்குரிய பிரதேச செயலாளர் அலுவலகங்களில் உள்ள பதிவாளர்கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
எனவே உங்களுடைய பிறப்பு சான்றிதழில் ஏதேனும் திருத்தங்கள்(Birth Certificate Correction/ Birth Certificate Alteration) மேற்கொள்ளவேண்டி இருப்பின் அது பதிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகத்துக்கு செல்லவேண்டும்.
ஒரு பிறப்பு சான்றிதழில் 15 கூடுகள் காணப்படும். இவற்றுள் பொதுவாக கூடு 1- 9 வரை பிழையாக பதிவிடப்பட்டிருப்பின் திருத்த முடியும்.
இங்கு கூடு 2 ல் சான்றிதழுக்குரியவரின் பெயர் காணப்படும். இதனை திருத்தம் செய்ய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படிவம் B9, B10 ஆகியன பாவிக்கப்படும்.
மேலும் கூடு 2 ல் சான்றிதழுக்குரியவரின் பெயர் பிறந்த போது பதியப்படாதுவிடின் பெயரை உட்சேர்க்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படிவம் B7, B8 ஆகியன பாவிக்கப்படும்.
கூடு 1,5,7 போன்ற விபரங்களை திருத்தம் செய்ய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படிவம் B61 பாவிக்கப்படும்.
கூடு 4,6,8,9 போன்ற விபரங்களை திருத்தம் செய்ய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படிவம் B37A பாவிக்கப்படும்.
அதிகம் படிவங்கள் இருக்கின்றன என குழப்பமடைய வேண்டாம். தொடர்ந்து அவற்றின் பிரயோகம் பற்றி பார்ப்போம். பிறப்பு சான்றிதழின் மாதிரி கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதில் சிவப்பு வட்டமிட்ட பகுதிகள் “கூடு” (Cage) என அழைக்கப்படும்.
உங்கள் பிறப்பு சான்றிதழில் அப்பாவின் பெயரும், அம்மாவின் பிறந்த திகதியும் தவறுதலாக பதிவிடப்பட்டிருப்பின் அதனை திருத்துவதற்கு பாவிக்கப்படும் படிவங்கள் எவை?
பதிவின் இறுதியில் உள்ள கமெண்ட் பாக்ஸ் ல் உங்கள் விடையை பதிவிடுங்கள்.
இங்கு கூடு 2 ல் சான்றிதழுக்குரியவரின் பெயர் காணப்படும். இதனை திருத்தம் செய்ய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படிவம் B9, B10 ஆகியன பாவிக்கப்படும் என ஏற்கனவே கூறியிருந்தேன்.இதில் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கு பெயர் திருத்தவேண்டியிருப்பின் படிவம் B10 ம் 18 வயதிற்கு குறைந்தவருக்கு பெயர் திருத்தவேண்டியிருப்பின் படிவம் B9 ம் பாவிக்கப்படும்.
மேலும் கூடு 2 ல் சான்றிதழுக்குரியவரின் பெயர் பிறந்த போது பதியப்படாதுவிடின் பெயரை உட்சேர்க்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் படிவம் B7, B8 ஆகியன பாவிக்கப்படும் என ஏற்கனவே கூறியிருந்தேன். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கு பெயர் உட்சேர்க்க வேண்டியிருப்பின் படிவம் B8 ம் 18 வயதிற்கு குறைந்தவருக்கு பெயர் உட்சேர்க்க வேண்டியிருப்பின் படிவம் B7 ம் பாவிக்கப்படும்.
எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.
பொதுவாக 18 வயதிற்கு குறைந்தவருக்கு பெற்றோர்/ பாதுகாவலர் மூலம் செய்யப்பட்ட விண்ணப்பம் மூலமும் 18 வயதிற்கு மேற்பட்டவராயின் உரியவரால் செய்யப்படும் விண்ணப்பபடிவம் மூலமும் திருத்தம் செய்யலாம்.
உரிய விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி சமாதான நீதவான் ஒப்பம் பெற்று பிறப்பு சான்றிதழ் பதியப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.50 செலுத்தப்படவேண்டும்.
சரியாக பெயரை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்படவேண்டும். பொதுவாக அடையாள அட்டை , குடும்ப அட்டை, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்கள் , வங்கி புத்தகம் போன்றவற்றின் பிரதிகள் இணைக்கப்படலாம்.
உங்கள் ஆவணங்களில் மேலதிக மாவட்டப் பதிவாளர் திருப்தியடையும் பட்சத்தில் 1-2 நாட்களில் திருத்தம் மேற்கொள்ளபடலாம்.
தற்போதுள்ள பெயரை முழுமையாக மாற்றுதல்/ மதம் மாறியதன் காரணமாக முழுமையாக மாற்றுதல் போன்ற சூழ்நிலைகளில் தேசிய பத்திரிகையில் பிரசுரித்து குறித்த காலத்தின் பின் (பொதுவாக 1 வருடம்) எந்த ஆட்சேபனைகளும் யாராலும் தெரிவிக்கப்படவில்லை என கண்ட பின் மாற்றம் செய்யலாம்.
பிறப்பு சான்றிதழில் பிறந்த திகதி, இடம் போன்றவற்றை திருத்தம் செய்ய வைத்தியசாலை கடிதம், தடுப்பூசி அட்டை, ஜாதக குறிப்பு போன்றன இணைக்கப்பட வேண்டும்.
பிறப்பு சான்றிதழில் தந்தையின் விபரம் (கூடு 4), தாயின் விபரம் (கூடு 5) போன்றவற்றில் திருத்தம் செய்ய தாய்,தந்தையின் பிறப்பு, விவாக சான்றிதழ்கள், அவர்களின் அடையாள அட்டை,ஏனைய பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் போன்றன இணைக்கப்பட வேண்டும்.
உரிய விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி சமாதான நீதவான் ஒப்பம் பெற்று பிறப்பு சான்றிதழ் பதியப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு படிவத்திற்கு கட்டணமாக ரூ.50 செலுத்தப்படவேண்டும்.
மேற்படி விண்ணப்பத்திற்கான அனுமதி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மாகாணத்துக்கு பொறுப்பான உதவிபதிவாளர்நாயகம் அவர்களால் அனுமதிக்கப்படவேண்டும். அதற்காக கோவை(File) பிரதேச செயலகத்திலிருந்து உதவி பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டும்.வடக்கு மாகாணத்துக்குரிய அலுவலகம் யாழ்ப்பாண மாவட்டசெயலகத்தில் அமைந்துள்ளது.
உதவிபதிவாளர்நாயகம் அவர்களால் அனுமதிக்கப்பட்ட கோவை மீள பிரதேச செயலகத்துக்கு கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக மாவட்டப்பதிவாளரால் பிறப்பு சான்றிதழ் திருத்தும் செய்யப்படும். இதற்கு பொதுவாக 1 மாத காலம் வரை செல்லும்.
பிரதேச செயலகத்திலிருந்து அனுப்பப்பட்ட எல்லா விண்ணப்ப படிவமும் உதவி பதிவாளர் நாயகத்தால் அனுமதிக்க படுவதில்லை. திருத்தங்களை மேற்கொள்ள போதிய ஆதாரங்கள் இல்லாதவிடத்து அனுமதி மறுக்கப்படலாம்.
உதவி பதிவாளர் நாயகத்தால் விண்ணப்பம் மறுக்கப்பட்டு 1 மாத காலத்தில் மாவட்ட நீதிமன்றில் வழக்கிட்டு நிவாரணம் பெறலாம்.
குடியியல்பதிவு தொடர்பாக முழுமையான விபரங்களை பெற இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்கள இணையதளத்தை நாட முடியும். பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் சகல பிரதேசசெயலகங்களின் பதிவாளர்கிளையில் பணிக்கமர்த்தப்பட்டிருப்பர். உங்களுக்கு மேலதிக சந்தேகங்கள் இருப்பின் அவர்களை தொடர்புகொள்ள முடியும்.
சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
மேலும் உங்களுக்கு இந்த பதிவு தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் கேள்விகள் கேட்கமுடியும்.
எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.